சென்னை,
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.
கஜா புயல் பாதிப்பு பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது. 12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரும் 21, 22-ந் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.