ஆலங்குளம்:
ஆலங்குளம் சுகாதார ஆய்வாளர் கங்காதரன், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலங்குளம் பஸ் நிலையம், அம்பை சாலை, பிரதான சாலை, ராம்நகர் மற்றும் தாழையூத்து பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரும்பாலான டீக்கடைகளில் நிறம் கூட்டுவதற்காக புளியங்கொட்டை தோல் கலந்த தேயிலை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த தேயிலையை பறிமுதல் செய்து அகற்றப்பட்டது. மேலும் கலப்பட தேயிலை கலந்து டீ தயாரித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தாழையூத்து கிராமத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, கடைகளுக்கு கலப்பட தேயிலையை விற்பனைக்காக கொண்டு வந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்த மாடசாமி என்பவரிடம் இருந்து 10 கிலோ தேயிலையை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஓட்டல் ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர்களை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக உள்ளாட்சி பிரதிநிதி ஒருவரின் கணவர் மீது ஆலங்குளம் பாலீசில் புகார் செய்யப்பட்டது. அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.