விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் முக்கிய மத நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதன்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணியினர் சார்பில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அந்த அமைப்பின் பொது செயலாளர் பக்தவச்சலம், சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தின்போது சி.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடையை விலக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த 37 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை காரணம் காட்டி தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள், மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளது. தினந்தோறும் சட்டசபை கூட்டத்தொடரும் நடக்கிறது. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனவே தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு போட்டுள்ள தடையை விலக்கி, அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு தடையை விலக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.