வேலூர்,
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதன்பின் வேலூரில் செய்தியாளர்கள் முன் பேசிய துரைமுருன், எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர். இன்று அதிகாலை 3 மணியளவில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினார்கள். பின் திரும்பி சென்று விட்டார்கள்.
எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணியில்லாமல் வருமான வரி துறை சோதனையை நடத்தி பூச்சாண்டி காட்டுகின்றனர். நாங்கள் மிசாவையே சந்தித்தவர்கள். சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது. நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சோதனை நடத்துவதற்கான காலம் இதுவல்ல.
தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனது மகன் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமுடன் இருக்கிறது. அதனை திசை திருப்பவே வருமான வரி துறை சோதனை நடத்துகின்றனர் என விளக்கம் அளித்துள்ளார்.