தமிழக செய்திகள்

6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி

6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முகநூல் மூலம் அறிமுகம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29), விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார். தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர். அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்.

காதலாக மலர்ந்தது

பின்னர் இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை மணிகண்டன் தெரிவித்தார். இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவிலில் வைத்து திருமணம்

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது. திருமணத்தின்போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பிவைத்தார்.

வீட்டில் இருந்த பணம் மாயம்

அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது.

காதல் மனைவியின் மிரட்டல்

இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்டபோது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார்.

போலீசில் புகார்

பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனிப்படை அமைத்து மகாலட்சுமியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, மகாலட்சுமி சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

5-வதாக சிக்கிய மணிகண்டன்

மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டும் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார்.

3 குழந்தைகளின் தாய்

மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தற்போது 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளதும் தெரியவந்தது.

இதுவரை ஏமாந்தவர்கள் யார்?

தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் இதுவரையில் ஏமாற்றப்பட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை