தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் அதிரடி கைது

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலைகள் செய்ததில் தங்கம் முறைகேடு வழக்கில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

சென்னை,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், புகழ்பெற்ற பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டது.

இந்த சிலைகள் செய்ததில் தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. சோமாஸ்கந்தர் சிலை 111 கிலோ எடையிலும், ஏலவார்குழலி சிலை 65 கிலோ எடையிலும் செய்யப்பட்டது.

2 சிலைகளிலும் 8.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடை மூலம் பெறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எழுந்த புகாரில் 2 சிலைகளிலும் சிறிது அளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், 8.75 கிலோ தங்கமும் முறைகேடு மூலம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்கள். ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட 2 சிலைகளையும் சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் 2 முறை சோதனை செய்து பார்த்தனர். சோதனையில் அந்த சிலைகளில் சிறிதளவுகூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. 8.75 கிலோ எடை தங்கத்தையும் முறைகேடு மூலம் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 6 பேர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தங்கம் முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் ஒருவருக்கும், தற்போதைய கூடுதல் ஆணையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிபட தெரியவந்தது.

அதுபற்றி நடத்திய விசாரணையில் தங்கம் முறைகேட்டில் ஈடுபட்டது அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (கோவில் திருப்பணிகள்) கவிதா என்பது தெரியவந்தது.

அவர் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரை கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர், நேற்று காலை முதலே தயாரானார்கள்.

காலை 10.30 மணியளவில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து, காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்துகொண்டு இருந்தார்.

அப்போது, தனிப்படை போலீசார் நடுவழியில் காரை நிறுத்தி, கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்தனர்.

அவரை சென்னை, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பிறகு அவரை கும்பகோணத்தில் செயல்படும், சிலை கடத்தல் தொடர்பான சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (பொறுப்பு) அய்யப்பன்பிள்ளை வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு போலீசார், கவிதாவை ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வந்தார். திருப்பணிகள் செய்ததிலும் அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. பிரச்சினைக்குரிய 2 சிலைகள் செய்யப்பட்டது தொடர்பாக அவர் தான் ஆணை பிறப்பித்து உள்ளார்.

ஏலவார்குழலி சிலை புதிதாக செய்யப்படவேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. அந்த சிலை ஏகாம்பரநாதர் கோவிலில் எந்தவித சேதமும் அடையாமல் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தங்கம் மோசடிக்காகவே அந்த சிலை சேதம் அடைந்ததாக சொல்லி, புதிய சிலை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி கவிதா குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று அறநிலையத்துறையில் துணை ஆணையராக முதலில் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு, திருத்தணி முருகன் கோவிலிலும், மருதமலை முருகன் கோவிலிலும் இணை ஆணையராக பணியாற்றி இருக்கிறார்.

பின்னர் பதவி உயர்வு பெற்று கூடுதல் ஆணையராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை