தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதல் அமைச்சர் சட்டசபையில் கூறினார்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த உடன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கில் சட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.