சென்னை,
சுங்கச்சாவடிகளை நாடு முழுவதிலும் இருந்து நீக்கி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்துவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் கனரக வாகனங்களும், 1 லட்சம் மினி வேன்களும் இயங்காது. இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 4வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழ்நிலை எழுந்தது. கோயம்பேடு சந்தையில் தக்காளி, உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.