தமிழக செய்திகள்

திருச்சி அருகே தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: கணவர் கண்முன்னே பெண் அடித்துக்கொலை 3 மகன்களுடன் கொழுந்தன் கைது

திருச்சி அருகே தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கணவர் கண்முன்னே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கொழுந்தன், 3 மகன்களுடன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

தினத்தந்தி

சோமரசம்பேட்டை,

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் ஏழு வாய்க்கால் கரையை சேர்ந்தவர் குமாரலெக்கன். இவருடைய மனைவி ரெங்கம்மாள் (வயது 50). இருவரும் விவசாயிகள். குமார லெக்கனின் தம்பி பூசைமணி (47). அவருடைய மகன்கள் மருதுபாண்டி (23), வீரவேல் (23), அஜீத்குமார் (20). குமாரலெக்கன்-பூசைமணி குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலம் அருகருகே உள்ளது.

அதில், அரசுக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று காலை குமாரலெக்கனும், ரெங்கம்மாளும் தங்கள் வயலில் பயிரிட்டுள்ள கத்திரி செடிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர்.

அங்கு அவர்கள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த பூசைமணி நீங்கள் எப்படி முதலில் உங்கள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலாம் என்று கேட்டு பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து குமாரலெக்கனும், ரெங்கம்மாளும் வீட்டுக்கு வந்துவிட்டனர். இந்தநிலையில் தனது வீட்டுக்கு சென்ற பூசைமணி, தனது மகன்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி, வீரவேல், அஜித்குமார் ஆகியோர் தனது தந்தையை அழைத்துக்கொண்டு பெரியப்பா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி, அங்கிருந்த கம்பியால் குமாரலெக்கனையும், ரெங்கம்மாளையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரெங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ரெங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குமாரலெக்கன் கொடுத்த புகாரின் பேரில், மருதுபாண்டி, அவருடைய தந்தை பூசைமணி, தம்பிகள் வீரவேல், அஜீத்குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு