திட்டமிட்டே கட்சிகளை தவிர்த்தனர்
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசின் போக்கிற்கு ஏற்ப அவசரமாக ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. போன்ற கட்சிகளை அனுமதிக்காமல் திட்டமிட்டே தவிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறது.ஆக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக அந்த தளத்தை திறப்பது என்பதற்கு சட்டப்பூர்வமான அல்லது அதிகாரப்பூர்வமான ஒரு ஒப்புதலை பெற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு மாநில அரசும் இணங்கியிருக்கிறது.
ஸ்டெர்லைட்டுக்கு ஒத்துழைப்பு
பொதுத்துறைகளின் மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். பெல், என்.எல்.சி. போன்ற நிறுவனங்கள் மூலமாகவும், இன்னும் அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.வேதாந்தா நிறுவனத்திற்கு வடஇந்தியாவில் கூட ஏராளமான இடங்களில் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் உள்ளன. அங்கெல்லாம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முனைப்பு காட்டாமல் தமிழகத்தில் சட்டப்படி மூடப்பட்டிருக்கிற ஆலைக்குள்ளேயே ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்போகிறோம் என்று வேதாந்தா குழுமம் கூறுகிறது. அதற்கு
மத்திய அரசும், மாநில அரசும் ஒத்துழைத்து வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிற நிலையில் தமிழக அரசு, மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிற ஆக்சிஜன் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு தேவைப்படும் என்பதை பிரமாண வாக்குமூலத்தில் பதிவு செய்து அதற்காக வழக்காட வேண்டும்.தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே பயன்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அரசு புதிய மனுதாக்கல் செய்ய வேண்டும். கொரோனாவை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு
முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பது மக்களுக்கு நல்லது. பொது முடக்கத்தை அரசு அறிவித்தாலும் கூட அதற்கு நாம் ஒவ்வொருவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது துரை.ரவிக்குமார் எம்.பி. உடனிருந்தார்.