தமிழக செய்திகள்

செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்... 12-ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு

தேர்வுக்கு படிக்கும்போது ஏன் செல்போனை பார்த்து நேரத்தை வீணடிக்கிறாய் என்று மாணவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் மாதேஷ் (45 வயது), விவசாயி. இவரது மகன் அஜித் என்ற அஜித்குமார் (17 வயது). அந்தேவனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

அஜித்குமார் வீட்டில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தபோது செல்போன் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது தேர்வுக்கு படிக்கும்போது ஏன் செல்போனை பார்த்து நேரத்தை வீணடிக்கிறாய்? என்று பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அஜித்குமார் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பதாக கருதிய பெற்றோர் தோட்டத்திற்கு விவசாய பணிக்கு சென்றுள்ளனர். காலை 7.30 மணியளவில் அவர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது திறக்கவில்லை. பலமுறை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் அஜித்குமார் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்கள் மகனை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாணவரின் தந்தை மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read:மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்கள் அதிகரிப்பு - அரசு அனுமதி