புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து வழங்குகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலா, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின்கீழ் வருகிற தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், பைசர், மாடர்னா தடுப்பூசிகள் தங்களது 3-வது கட்ட மருத்துவ சோதனையை கொரோனாவின் 2-வது அலையின்போது நடத்தி இருந்தால் அவற்றை தயாரித்து அளிப்பதற்கான உரிமம் கிடைத்திருக்காது என தெரிவித்தார்.
மேலும், அந்த தடுப்பூசிகள் உரிமம் பெற்றபோது, இங்கு உகானில் உருவான கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த தடுப்பூசிகள் 90 சதவீத செயல்திறனைப் பெற்றன. ஆனால் தற்போது அதே தடுப்பூசிகளுக்கு இஸ்ரேலில் 35 சதவீத செயல்திறன்தான் கண்டறியப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு இப்போது கிட்டத்தட்ட 77 சதவீத செயல்திறன் இருக்கிறது. அதே நேரத்தில் டெல்டா ஆதிக்கம் இன்றி உகான் கொரோனா வைரஸ் ஆதிக்கத்தில் இருந்திருந்தால் 85 சதவீத செயல்திறன் கிடைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.