கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வேர் கடலை, பிளாஸ்டிக் கவர் விலை உயர்வு... கோவில்பட்டி பேமஸ் கடலை மிட்டாய் தயாரிப்பு பாதிப்பு

கடலை மிட்டாய் பாக்கெட் செய்யும் பிளாஸ்டிக் கவர், தாள், டப்பாக்களின் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் உலகப்புகழ் பெற்றது. இங்கு சுமார் 120 கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் நேரடியாக 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக 15 ஆயிரம் பேரும் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ) கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் கடலை மிட்டாய்க்கு மூலப்பொருளான வேர்க்கடலை விலை உயர்வால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது, அந்த மிட்டாய் பாக்கெட் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் கவர்களின் விலையும் உயர்ந்துள்ளதால், கடலை மிட்டாய் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, "மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கடலை மிட்டாய் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய் தயாரிப்புக்கு 90 சதவீதம் விறகு அடுப்புகளே பயன்படுத்துவதால், வணிக கேஸ் சிலிண்டர் நிறுத்தத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால், கடலை மிட்டாய் பாக்கெட் செய்யும் பிளாஸ்டிக் கவர், தாள், டப்பாக்களின் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் தயாரிப்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலை மிட்டாய்கள் மீது கிலோவுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்புவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT