சென்னை,
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "மெரினா கடற்கரை போல், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்புப் பாதை அமைக்கப்படும். அதற்காக கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். சென்னை மாநகரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள், மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கப்படும்" என்று அவர் கூறினார்.