சென்னை,
மழைக்காலங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுவதாலும், தெரு ஓரங்களில் உள்ள சேதமடைந்த மின்பகிர்வு பெட்டிகளில் இருந்து மின்சாரம் கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்களும், கால்நடைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது வாடிக்கையாக நடந்துவருகிறது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள சூழலில் மின்சார விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள் பின்வருமாறு:-
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்களைத் தாங்கி நிற்கும் கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் எவரும் செல்லக் கூடாது. அதுகுறித்து உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது வெட்டவெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ நிற்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அதேபோல் இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன், டெலிபோன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் அருகில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம். வீட்டு சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்தப்பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதியில் மின்சார பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
வீடுகளில் மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்சார ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். அதேபோல் ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட, நட்சத்திர குறியிட்ட மின்சார சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மின்கம்பத்திலோ, அதை தாங்கி நிற்கும் கம்பிகளிலோ துணிகளை காயவைக்க கூடாது. அதேபோல் அவற்றில் கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.
பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதைத் தவிர்க்கவேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் மின்சார விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரும். வீடுகளில் மின்சார கசிவு தடுப்பு சாதனம் பொருத்த வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.