நெல்லை,
சாத்தான்குளம் வியாபாரி-மகன் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தினார்.
கோவில்பட்டி சிறையில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செல்வமுருகன் தலைமையில் டாக்டர்கள் பிரசன்னா, ஸ்ரீதர், சீதாலட்சுமி ஆகியோர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து ஜெயராஜின் உறவினர்கள் 3 வேன் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா ஆகியோரும் வந்து இருந்தனர். பிரேத பரிசோதனை நடைபெறும் அறை முன்பு உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி 1-வது கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் காலை 11 மணி அளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் அறைக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் 2-வது மாடியில் தனது விசாரணையை தொடங்கினார். உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தினார்.அவர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் பற்றியும் கூறினர். இதுவரை அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை என்றும், போலீசார் சாத்தான்குளத்தில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பற்றியும் கூறினர். உடலில் காயங்கள் ஏதாவது உள்ளதா என மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். உறவினர்களிடம் நடத்திய விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டது.
அப்போது பிரேத பரிசோதனை அறை முன்பு நின்று கொண்டு இருந்த உறவினர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினார்கள்.அப்போது அவர்கள் கூறுகையில், 2 பேரையும் போலீசார் திட்டமிட்டு அடித்து கொலை செய்து விட்டனர். சம்பந்தப்பட்ட போலீசாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறினர்.
மாலையில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணையை முடித்தார். அவருடைய அனைத்து விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவில் பிரேத பரிசோதனை நடந்தது. மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், தந்தை-மகன் சாவுக்கு காரணமாக போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று இரவில் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் வியாபாரிகளின் உறவினர்கள், பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.