தமிழக செய்திகள்

வாலிபர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

மலேசியாவில் தற்கொலை செய்த வாலிபர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி உறவினர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தேனி:

மலேசியாவில் தற்கொலை

தேனி அல்லிநகரம் சொக்கம்மன் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 23). இவர் மலேசியாவில் உள்ள ஒரு காய்கறி விற்பனை நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வேலைக்கு சென்றார்.

அங்கு அவர் தங்கி இருந்த அறையில் கடந்த 1-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகவும், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் அல்லிநகரத்தில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்துக்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவருடைய உறவினர்கள் கடந்த 2-ந்தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், முத்துக்குமாரின் உறவினர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

சாலை மறியல்

முத்துக்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறியும் கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களில் சிலர், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உரிய விதிகளை பின்பற்றி துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு