சென்னை,
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.