சென்னை,
இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த பாலாஜி கடலில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியும், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயல் கிராமத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் உசைன் ஆகியோர் சாலை விபத்திலும் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.
பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மின்கம்பத்தில் பணியில் இருந்த போது மின்கம்பம் உடைந்து கீழே விழுந்ததிலும், மரக்காணம் தாலுகா கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டும் வேதனை அடைந்தேன்.
இதுபோல பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.