தூத்துக்குடி,
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சி.பி.ஐ. காவல் நாளை மாலை முடிய உள்ள நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் முன்கூட்டியே நீதிமன்றத்தில் 3 காவலர்களை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் காவலர்கள் 3 பேருக்கும் ஆகஸ்ட் 5 தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.