சென்னை,
பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவத்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், கிராம உரிமை மீட்பு பேரணி என் பெயரில் பேரணி நடத்தி வருகின்றனர். அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு ஏற்கெனவே தொடங்கி உள்ளது. இதற்காக 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை நடக்கிறது. இதில் பரந்தூர் விமான நிலையம் அமையும் 13 கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இதனால் பரந்தூர் விமான நிலையம் குறித்த முக்கிய முடிவுகள் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.