ஓடும் காரில் தீ
கர்நாடக மாநிலம் பெங்களூரு எஸ்.ஆர்.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆரிபுல்லா. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினரை சந்திக்க நேற்று முன்தினம் காரில் சென்றார். உறவினரை பார்த்துவிட்டு ஆரிபுல்லா உள்பட குடும்பத்தினர் 7 பேர் மீண்டும் பெங்களூரு திரும்பினர்.இரவு 11.30 மணி அளவில் ஆம்பூரை அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து அதிக அளவு புகை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். உடனே காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கும்படி கூறினார். உள்ளே இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு காரில் இருந்து அனைவரும் இறங்கினர். அதற்குள் கார் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
உயிர் தப்பினர்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அணைக்க முடியவில்லை. தீயணைப்பு
துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது..காரில் புகை வந்தவுடன் காரை நிறுத்தி அனைவரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.