தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பா.ஜ.க. நிர்வாகியான ஆவரைகுளத்தை சேர்ந்த பாஸ்கரனை நேற்று முன்தினம் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை அடித்தது மட்டுமின்றி, அங்கிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கி எடுத்துச் சென்றுவிட்டார்கள். பாஸ்கரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. எம்.பி.க்களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது நெல்லை எம்.பி. ஞானதிரவியம், ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவர் மீதும் கடுமையான வழக்குப்பதிவு செய்து போலீசார் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை கேட்டுக்கொள்கிறேன். ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ஜ.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.