தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இந்திய ராணுவத்தின் எல்லைப்பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 17-ந்தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் சுரேஷ் வீரமரணம் அடைந்தார்.
அமைச்சர்-கலெக்டர் அஞ்சலி
சுரேசின் உடல் விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவருடைய உடல் நேற்று அதிகாலை 4 மணிக்கு அவருடைய சொந்த ஊரான பண்டாரசெட்டிபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
தேசிய கொடி போர்த்தப்பட்ட நிலையில் இருந்த சுரேசின் உடலை பார்த்து அவருடைய மனைவி ஜானகி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அந்த பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுரேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், எல்லைப்பாதுகாப்பு படையின் துணை கமாண்டர் கமலேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்பட பலர் சுரேசின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வீரமரணம் அடைந்த சுரேசின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுரேசின் மனைவி ஜானகியிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
21 குண்டுகள் முழங்க...
காலை 10.30 மணி அளவில் சுரேசின் உடல் அருகே உள்ள இடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இடுகாட்டில் எல்லைப்பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளில் 21 குண்டுகளை முழங்க செய்து ராணுவ மரியாதையுடன் சுரேசின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சுரேசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சுரேசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்டாரசெட்டிப்பட்டியில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.