சென்னை,
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மாணவர் விடுதியில் தயாராகிவரும் சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 28 ஆயிரத்து 5 பேர் தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று குணமடைவோரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவோம். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் பெயர்களை 10 நாட்கள் கழித்து தானாகவே நாங்கள் எடுத்துவிடுவோம்.
தனிமைப்படுத்துதல், வீட்டுக்கு வீடு சர்வே ஆகியவற்றை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம். மறுபடியும் மக்கள் தடுப்பூசியை வேகமாக எடுத்துக்கொள்கின்றனர். கொரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பானது. 13-14 லட்சம் பேருக்கு மேல் இதுவரை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். சென்னைக்கு மட்டும் 2 லட்சம் தடுப்பு மருந்துகளைப் பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. தினமும் தடுப்பு மருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன. மே 1-ம் தேதியிலிருந்து 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அப்போது இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்னும் வேகமெடுக்கும்.
கொரோனா தடுப்பூசி அறிவியல் ரீதியில் பாதுகாப்பானது. இஸ்ரேலில் 68%-க்கும் மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், முகக்கவசம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத சூழல் உள்ளது. அங்கு கொரோனா தொற்றும் இல்லை, உயிரிழப்பும் இல்லை. அந்த நிலையை நாம் சீக்கிரமாக அடைய வேண்டும். ஏனென்றால் இயல்பு வாழ்க்கை முக்கியம். இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவது நம் கையில்தான் உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும். நம் வாசலுக்கு அருகிலேயே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதனைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.