கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொதுவாக வைரஸ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உருமாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், கொரோனா வைரஸ் அவ்வாறாக வீரியமடைந்துள்ளது. அதை டெல்டா பிளஸ் வகை வைரசாக மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அத்தகைய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய கொரோனா வைரசை காட்டிலும், அது வீரியமிக்கதாகவும், எளிதில் தொற்றக்கூடியதாகவும் உள்ளது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் அதுதொடர்பாக சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி
அதன்படி, டெல்டா வகை பாதிப்புக்குள்ளான அனைவரது உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம். அவர்களது உடல்நிலை மோசமடைந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டார் என அனைவரையும் கண்காணித்தல் அவசியம். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று டெல்டா வகை பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதன் வாயிலாக புதிய வகை வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க முடியும். அனைத்து மாவட்டங்களும் இந்த அறிவுறுத்தல்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.