சென்னை,
கவர்னரின் தனி அதிகாரம்
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் வாய்ப்பு கோரியுள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு தங்களுக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கேட்டுள்ளனர்.
இவர்களில் யாருக்கு முதல் வாய்ப்பு வழங்கவேண்டும்? என்பது கவர்னரின் தனி அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயமாக உள்ளது. மேலும் பெரும்பான்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே அதை நிரூபிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு கவர்னர் உத்தரவிடுவார்.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சபாநாயகரின் நடுநிலை
கவர்னர் தான் எடுக்கும் முடிவின்படி முதலில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனுமதித்தால், அதற்காக சட்டசபையை கூட்டுவதற்கு கவர்னர் உத்தரவிடுவார். அந்த சட்டசபை கூட்டத்தில் முதல்அமைச்சர் எல்லா எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கோரி, உரை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார். சபாநாயகர் தான் இந்த சபையை நடுநிலையோடு நடத்துவார்.
அவர் ஆற்றிய உரை நிறைவு பெற்றதும், ஓட்டெடுப்புக்காக சபாநாயகர் உத்தரவிடுவார். தமிழக சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முதல் பிரிவினர் யாரெல்லாம் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்பார். அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அப்போது எழுந்திருக்க வேண்டும். அப்போது அவர்களின் பெயர்களை சட்டசபை செயலாளர் குறித்துக்கொண்டு அதை சத்தமாக படிப்பார். அதன்பிறகு அந்த எம்.எல்.ஏ.க்கள் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
ஆதரவும், எதிர்ப்பும்...
அதன்பிறகு முதல்அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று சபாநாயகர் கேட்பார். உடனே அந்த பிரிவில் உள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நிற்பார்கள். சட்டசபை செயலாளர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டு, அதை சத்தமாக படிப்பார். பின்பு அவர்கள் உட்கார்ந்து விடுவார்கள்.
அதன்பின்னர் நடுநிலை வகிப்பவர்கள் யாரோ, அவர்களை எழுந்து நிற்குமாறு சபாநாயகர் உத்தரவிடுவார். நடுநிலை வகிப்பவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டு வாசிக்கப்படும். அந்தவகையில் அனைத்து பிரிவுகளில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்கும் கணக்கிடப்படும்.
பின்பு முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு எத்தனை பேர்? எதிர்ப்பு எத்தனை பேர்? என்பது கணக்கிடப்பட்டு அவருடைய பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதா? என்பதை சபாநாயகர் அறிவிப்பார்.
சபாநாயகரின் ஆதரவு
ஒருவேளை சசிகலாவை முதலாவதாக அழைத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கேட்டுக்கொள்ள முடிவு செய்தால் அதற்கு முன்பு, சசிகலாவுக்கு முதல்அமைச்சராக கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைப்பார். அதன்பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுவார். அதனைத்தொடர்ந்து மேற்கண்ட முறையிலே வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த வாக்கெடுப்பில் சபாநாயகர் நடுநிலைதான் வகிக்கவேண்டும். ஆனால் ஒருவேளை ஒரு பிரிவுக்கு ஆதரவு கிடைப்பதற்கு ஒரு எம்.எல்.ஏ. கூடுதலாக தேவையென்றால், அப்போது மட்டும் சபாநாயகர் தனது கையை உயர்த்தி தனது ஆதரவு யாருக்கு? என்பதை வெளிப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.