தஞ்சாவூர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் யாதவ தெருவில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தன. இந்த பகுதிக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால் தஞ்சைக்கு தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்டி நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் மற்றும் ராமதாஸ், ஜெகதீஷ், திலகராஜ் உள்பட 10 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் நேற்று காலை காவிரி விவசாயிகள் சங்க துணை செயலாளர் வீரப்பன் தலைமையில் விவசாயிகள் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்த முயன்ற 7 பேரை கைது செய்தனர். இதே போல் தஞ்சை தாலுகா போலீசார், விவசாயிகள் 2 பேரை கைது செய்தனர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கவர்னர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா நடந்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.