சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி சிதைந்து போனது. கட்சியின் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பிறகு, அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமானது. கட்சியின் பொதுச் செயலாளராக அவர் நீடித்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில், டி.டி.வி.தினகரன் மட்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகியோர் கட்சி எதையும் தொடங்கவில்லை.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை 'துரோகி' என்று கடுமையாக விமர்சித்து வந்த டி.டி.வி.தினகரன், தற்போது அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரன் வருகையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, 'அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துவந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அது நடக்காது என தெரிந்தவுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று இணைந்திருக்கிறார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் எந்தவித முடிவையும் அறிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். அதனால், அவரும் விஜய்யுடன் கைகோர்ப்பார் என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், பெரியகுளத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வில் இணைய நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ரெடியா?" என்று தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால், அவரது கோரிக்கையை சற்று நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அது எப்படி, 'துரோகி' என்று கூறிய டி.டி.வி.தினகரனையே ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மேலோங்கியது.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகிறார். டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க சம்மதித்தார் என்றால், அவர் அ.ம.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரால் அ.தி.மு.க.வில் பிரச்சினை எதுவும் வராது என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.
அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கட்சி எதுவும் தொடங்காத நிலையில், அவரை அ.தி.மு.க.வில் தான் மீண்டும் இணைக்க வேண்டிய சூழல் வரும் என்பதால், 'இரட்டை தலைமை' என்ற கோஷம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
ஏற்கனவே, கட்சி தலைமை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணைய கதவுகளை ஓ.பன்னீர்செல்வம் தட்டியதுடன், சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களையும் எடுத்து சென்றதால், அவர் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார்.
அதனால்தான் டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்க மறுக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும், கூட்டணியில் தற்போது டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளதால், தென்மாவட்டங்களில் அ.தி.மு.க. வாக்கு வங்கி சிதறாது என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுவதால் தான், ஓ.பன்னீர்செல்வம் இனி தேவையே இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.