மதுரை,
மதுரை வளர்நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அரசு அறிவித்தது. அதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14 ஆயிரமும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் 585 மருத்துவ உதவியாளர்களும், 1,415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் கடந்த மாதம் 15-ந்தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.
இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீடு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனா நோய்தொற்று நேரங்களில் அனுபவம் இல்லாத செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்காது. எனவே இதுதொடர்பான அறிக்கையை ரத்து செய்து, முறையாக பணியாளர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரினார். இதையடுத்து உரிய அவகாசம் அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதுவரை மினிகிளினிக் பணியாளர் தேர்வு செய்வதில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மினி கிளினிக் என்பதுகொரோனா தொற்று காலத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு தான். அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி நியமனம் என்பது மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். ஆனால் மினி கிளினிக்குகளில் அவசர நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் பணி நியமனம் என்பது மத்திய சுகாதாரத்துறை இயக்ககம் பரிந்துரையின் அடிப்படையிலேயே குழு அமைத்து நடத்தப்படுகிறது என்று பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், மினி கிளினிக்குகளில் பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற கோர்ட்டு உத்தரவை மீறி தற்போது பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதாடினார். இருதரப்பு கருத்துக்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.