தமிழக செய்திகள்

50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின - முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர்

தமிழகத்தில், 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அந்தவகையில் ஊரடங்கில் சில தளர்வுகளும் கொண்டுவரப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுழற்சி முறையில் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் 18-ந்தேதி (நேற்று) முதல் செயல்படும் என்றும், வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 8.30 மணிக்கே ஊழியர்கள் செல்லும் வழித்தடங்கள், சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காலை 9 மணி முதலே சிறப்பு பஸ்கள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் தலைமைச் செயலகம் வந்தனர். பஸ்களில் இடைவெளி விட்டு அமர்ந்து சமூக இடைவெளியை கருத்தில்கொண்டு ஊழியர்கள் பயணித்தனர்.

பின்னர் ஊழியர்கள் ஒவ்வொருவராக தலைமைச் செயலக நுழைவு வாயிலுக்கு வந்தனர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து போலீசார் உள்ளே நுழைய அனுமதித்தனர். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு பணிபுரியும் அலுவலகம் வந்த சந்தோஷத்தை ஊழியர்கள் கண்களில் பார்க்க முடிந்தது.

முன்னதாக ஊழியர்களில் பலர் தலைமைச் செயலகம் முன்பாக உள்ள நாக தேவதை அம்மன் கோவிலில் மனமுருக வழிபட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

அலுவலகங்களில் இத்தனை நாட்களாக பிரிந்திருந்த சக ஊழியர்களை, நண்பர்களை பார்த்து பணியாளர்கள் அகமகிழ்ந்தனர். ஆனாலும் சமூக இடைவெளியை மனதில்கொண்டு தள்ளி நின்றே நலம் விசாரிக்க தொடங்கியதை பார்க்க முடிந்தது.

தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள், செவ்வாய்க் கிழமைகளிலும், இரண்டாம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் கிழமைகளிலும் பணியாற்றுவர். மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனி பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 50 சதவீத ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். அலுவலகம் வந்த ஓரிரு நிமிட நலம் விசாரிப்புக்கு பின்னர் உடனடியாக பணியை தொடங்கினர். ஆனாலும் நீண்ட நாட்களாக கணினி செயல்படாமல் இருந்தது, கோப்புகள் கையாளப்படாமல் இருந்தது போன்றவற்றால் பணியில் லேசான தொய்வு காணப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் அதனை சமாளித்து வழக்கம்போலவே பணிகளில் ஈடுபட்டனர்.

அதேபோல எழிலகம், குறளகம், டி.பி.ஐ. வளாகம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை போன்ற மாநில அரசு அலுவலகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. பணியாளர்கள் சுழற்சி முறையில் வந்தாலும். குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் வாரத்தின் 6 நாட்களும் பணிக்குவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று அனைத்து பிரிவு அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஊழியர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள், மொபட் மற்றும் கார்களில் வந்திருந்தனர். அதேவேளை பஸ்களில் குறைவான அளவிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்று ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்ததால் விடுமுறை நாட்களில் இயங்குவது போலவே அரசு அலுவலகங்கள் நேற்று காணப்பட்டன.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்