7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அதிகமான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கீழடியை அகழாய்வு பணிகளை வாரநாட்களில் பார்வையிட அனுமதி உண்டு. தொழிலாளர்களுக்கு விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை கீழடி அகழாய்வு பணிகளை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் இன்று(திங்கட்கிழமை ) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் கீழடி, கொந்தகையில் அகழாய்வு குழிகளை பார்வையாளர்கள் பார்க்க சிறப்பு அனுமதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் குவிந்தனர்
கீழடியில் அகழாய்வு குழிகளின் இடையே மேஜைகளில் சில பொருட்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தொட்டு பார்க்காதவாறு அதை சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில் 2 இடங்களில் துணி பந்தல் அமைக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக சிலம்பம், பெண்கள் சுருள் கத்தி வீசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மற்றொரு புறம் கரகாட்டம், நாட்டுப்புற பாடல்கள், கிராமிய மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பார்வையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் அகழாய்வு குழிகளை சுற்றிப் பார்த்தும் குழிக்குள் உள்ள உறைகிணறு, சிவப்பு நிற தானிய கொள்கலன் மற்றும் பல பொருட்களை வியந்து பார்த்தனர். அதன் பின்னர் மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர். சிலர் அகழாய்வு குழிகள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கலை நிகழ்ச்சிகள்
கீழடி, கொந்தகை அகழாய்வு தளங்களை பார்வையிட மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர். கீழடி சாலையிலிருந்து அகழாய்வு பணிகள் நடைபெறும் இடம் வரை பார்வையாளர்கள் வந்திருந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துலெட்சுமியின் கரகாட்டம் சிறப்பாக இருந்தது. அதேபோல் மதுரையைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து காட்டினார்.
மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையில் இருந்து கீழடி அகழாய்வு நடைபெறும் இடம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தென் தமிழக சுற்றுலா முகவர் சங்கத்தினர் கீழடிக்கு வாங்க என வழி நெடுக பேனர்கள் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பார்வையாளர்களில் சிலர் நெடுந்தொலைவில் இருந்து வந்துள்ளோம். கண்டுபிடித்த பொருட்கள் குறைவாகவே இருந்தது. இன்னும் அதிகம் வைத்திருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும் என்றனர்.