கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான 318 மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பால்ராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. அதனை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் ஆண்டிபாளையம், சின்னமநாயக்கன்பட்டி, நடராஜபுரம், வீரராக்கியம் ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே செல்ல வேண்டியிருக்கிறது. இருள் சூழ்ந்து இருக்கும் நேரத்தில் அந்த பகுதி சாலைகளில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்த தெருவிளக்குகளை சீர் செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் அருகே தும்பிவாடியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாக கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு தொழிற்சாலை வைத்து நடத்தி வரும் சிலர், ரசாயன கலவையை சேர்த்து தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றை எரிப்பதால் நச்சு புகை அதிகளவில் வெளிவருகிறது. இதன் காரணமாக ஊர் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த தொழிற்சாலை கழிவு நீரும் முறைப்படி அப்புறப்படுத்தப்படாததால் நிலத்தடிநீர் பாதிப்படைகிறது. எனவே இங்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மண்மங்கலம் வட்டம் அச்சமாபுரத்தை சேர்ந்த, சட்டபஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் கொடுத்த மனுவில், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் அடிக்கடி கணினியில் சர்வர் பழுதாவதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும். மேலும் அந்த மையத்திலுள்ள ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரவக்குறிச்சி தாலுகா ராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி அமராவதி ஆற்றில் மர்ம நபர்கள் சிலர் திருட்டு தனமாக மணல் அள்ளி செல்கின்றனர். இது குறித்து தட்டி கேட்ட சக்திவேல் என்பவரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். எனவே மணல் திருட்டை தடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கிருஷ்ணராயபுரம் தாலுகா பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனம் சார்பில் கரூர் முகவர்கள் மூலம் எங்கள் பகுதி மக்களிடம் தவணை முறையில் பணம் வசூலித்தனர். அப்போது மாதம் ரூ.100 வீதம் 63 தவணைகளுக்கு பணம் செலுத்தினால் 800 சதுரஅடியில் நிலம் தரப்படும் என்றும், அல்லது 12.5 சதவீத வட்டியுடன் பணத்தை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதிர்வு காலம் முடிந்த பிறகும் வாடிக்கையாளர்களுக்கு நிலமோ, பணமோ வழங்காமல் மோசடி செய்துவிட்டனர். இதனால் அவர்கள் தங்களிடம் பணம் வசூலித்த முகவர்களை கேட்பதால் மனம் உடைந்து அதில் சிலர் தற்கொலை முடிவுக்கும் வந்திருக்கின்றனர். எனவே எங்கள் பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவில் பட்டதலைச்சியம்மன், பெரியசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு 3,000 தலை கட்டு உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இந்த கோவில்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ள உரிய அனுமதி வழங்கக்கோரி மாயனூரை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.
மேலும் துணை ஆட்சியர் நிலை அதிகாரிகள் 9 பேருக்கு அவர்களின் பணியை மேம்படுத்த மடிகணினிகளையும், ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரியுமான குமரேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.