செய்திகள்

மின்கம்பங்களை சீரமைக்காத மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் கிராம மக்கள் அறிவிப்பு

திருமருகல் அருகே 10 இடங்களில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்களை சீரமைக்காத மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியில் பல இடங்களில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு, ஆற்றங்கரை தெரு, புதுமனை தெரு, வடக்கு தெரு, பட்டக்கால் தெரு, மேலகுடியான தெரு, மேலத்தெரு, புதுப்பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 10 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்கள் அனைத்திலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்சார துறையினரிடம் பலமுறை கேட்டும் செய்து தரப் படவில்லை என கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் இதனை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், அங்கு நடைபெறும் ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் கோரிக்கை வைப்பதாகவும், மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு ஆதலையூர் ஊராட்சி நிர்வாகமும், திருமருகல் ஒன்றிய அதிகாரிகளும் மின்வாரிய துறைக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் ஆதலையூரில் ஆபத்தான மின்கம்பங்கள் அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு அப்பகுதியை சேர்ந்த சேக்தாவூது தலைமை தாங்கினார். செல்லையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

ஆதலையூர் ஊராட்சி பகுதிகளில் 10 மின் கம்பங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழுந்து, பெரிய விபத்து எற்படும் நிலை உள்ளது. இதனை மின்வாரிய துறையினருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை சீரமைத்து தராமல் அலட்சியம் செய்து வரும் மின்வாரிய துறையினரை கண்டித்தும், உடனே ஆபத்தான மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வலியுறுத்தியும் திருமருகல் மின்வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆதலையூர் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்