சிட்னி,
ரஷ்ய ராணுவத்தின் உளவு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செர்கெய் ஸ்கிரிபால். பின்னர் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட செர்கெய், உளவாளிகள் பரிமாற்றம் அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்த செர்கெய், சாலிஸ்பரி நகரில் மார்ச் 4ந்தேதி தனது மகள் யூலியாவுடன் மயங்கி கிடந்துள்ளனர். அவர்கள் உடலில் விஷம் ஏறியிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், செர்கெய் விவகாரத்திற்கு பின்னால் ரஷ்யா உள்ளது என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது.
இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவு அதிகாரிகள் என கூறி இங்கிலாந்து வெளியேற்றியது. ரஷ்யாவும் இங்கிலாந்து தூதர்களை வெளியேற்றியது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் உளவாளிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் 2 ரஷ்ய தூதர்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இதனை அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் இன்று அறிவித்துள்ளார். உளவு துறை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டு உள்ள 2 ரஷ்ய தூதர்களையும் ஆஸ்திரேலிய அரசு வெளியேற்றுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.