பிரேசிலியா,
தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. அதேபோல் கொரோனா உயிரிழப்பில் அந்த நாடு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கொரனோ உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் தினசரி பாதிப்பும், பலியும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த நிலையில் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1,541 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 65 ஆயிரத்து 998 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.