வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6 ஆம் தேதி வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி டிரம்ப் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அனில் மேத்தா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்துள்ளா. வன்முறையாளர்களை டிரம்ப் தூண்டியதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், முன்னாள் அதிபர் என்பதற்காக அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், டிரம்ப்பின் பண்ணை வீட்டில் அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், டிரம்ப் மற்றும் அவரது மகன்கள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான விசாரணையில், அவர்கள் மூவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரம்ப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்த மற்றொரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு சட்ட நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.