பீஜிங்,
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தன. உகானில் உள்ள விலங்கு உணவு விற்பனை மையமொன்றில் இருந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசானது பரவியது என முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் அதற்கு போதிய சான்றுகள் வெளிவரவில்லை.
ஆனால், சீனாவே கொரோனாவுக்கான உற்பத்தி மையம் ஆக இருந்துள்ளது என அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தது. ஏனெனில், அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியது. இதனால், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் கூறி மிரட்டல் விடுத்தது.
வைரசின் தோற்றம் குறித்து சீனாவுக்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்து, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணைக்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அமைத்தது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் பட்டியலை சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு அளித்தது.
எனினும், குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க சீனா இழுத்தடித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டது. இதன்பின்னரே நிபுணர் குழு வருகைக்கு சீனா அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனா நாட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்புக்கான திட்ட தலைவர் பீட்டர் பென் எம்பேரக், சீனாவின் உகானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஆய்வகத்தில் இருந்து மனித இனத்திற்கு வைரசானது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது சாத்தியமில்லை.
நாங்கள் உகானின் வைராலஜி அறிவியல் மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வகத்தில் இருந்து வைரசானது தப்பி வெளியே செல்வதற்கான சாத்தியம் இல்லை. ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவும் சம்பவங்களும் மிக அரிது என்பது எங்களுக்கு தெரியும் என கூறினார்.
எனினும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புலனாய்வில் சீன அரசின் தலையீட்டிற்கான சாத்தியம் உள்ளது என குற்றச்சாட்டு எழுப்பிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன், நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை சாடினார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், கொரோனா வைரசின் பிறப்பிடம் அமெரிக்காவில் இருந்து தோன்றியதற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் சீனா வலியுறுத்தியது.
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வாங் வென்பின் கூறும்பொழுது, சீனாவை எடுத்துக்காட்டாக கொண்டு, கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் விவகாரத்தில் அமெரிக்காவும் நல்ல விதத்தில், அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.
கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களை அமெரிக்கா வரவேற்கும் என அதிரடியாக கூறினார்.
இதேபோன்று, சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை தொற்றியலாளர் ஜெங் குவாங் கூறும்பொழுது, கொரோனாவின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் சர்வதேச முயற்சிகளின் கவனம் தற்பொழுது அமெரிக்காவின் மீது உள்ளது என கூறினார். இதனால், சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்த அமெரிக்காவுக்கு அந்நாடு பதிலடி கொடுத்தது.
இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளிடம் இருந்து மறைக்கும் நோக்கில், தன்னுடைய டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை சீனா உயிர்த்தியாகம் செய்ய வைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில், கொரோனா பெருந்தொற்றுக்கான அச்சுறுத்தல் தெரிய தொடங்கியதும், அதனை சில வாரங்கள் வரை சீனா மூடி மறைத்துள்ளது. இதுபற்றி ஆன்னி ஸ்பேரோ என்பவர் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு உள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் பற்றி ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால், 24 மணிநேரத்தில் கொரோனா பற்றி உரிய பதிலளிப்பதற்கு பதிலாக, சட்ட மீறலில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வதந்திகளை உருவாக்குவோர், நம்புவோர் மற்றும் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம் என உகான் பொது பாதுகாப்பு வாரியம் அறிக்கை அளித்தது.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி டாக்டர்களை அமைதிப்படுத்தி வைத்தது உலக நாடுகளில் பெருந்தொற்று பரவ ஏதுவாக அமைந்து விட்டது.
அதுபற்றி உலக சுகாதார அமைப்பிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, தகவலை தணிக்கை செய்ய முடிவு செய்ததுடன், மறைக்கவும் செய்தது. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை விட முயன்ற டாக்டர்களை அமைதிப்படுத்தியது.
சீனாவின் இந்த தவறுகளால், சர்வதேச அளவில் பொது சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு உடனடியாக அறிவிக்காமல் இருக்க செய்து விட்டது.
கொரோனா பெருந்தொற்றை மூடி மறைத்த சீன அரசால் உலக சுகாதார அமைப்பு கொடிய தவறை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 5ந்தேதி, அறியப்படாத நிம்மோனியா என அந்த அமைப்பு உலகிற்கு தகவல் அளித்ததோடு நின்று விட்டது.
எபோலா, ஜிகா மற்றும் எச்.1.என்.1. வைரசுகளை போன்று இதனையும் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா பரவல் இல்லை என சீன அரசு மறுத்தது. ஆனால், 59 கொரோனா நோயாளிகளை உகானின் ஜின்யின்டான் மருத்துவமனைக்கு இடம் மாற்றியது.
அதன் தொற்றுநோய் பிரிவில் இருந்து நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வெளியே செல்ல அனுமதித்து உள்ளனர். ஆனால், மருத்துவமனை உள்ளே மருத்துவ பணியாளர்களை வெளியே விடாமல் பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 3ந்தேதியில் இருந்து சீனாவில் புதிய பாதிப்புகள் இல்லை என்று கடந்த ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், உலக சுகாதார அமைப்பிடம் சீனா கூறியது. ஆனால், உண்மையில், 20 சுகாதார பணியாளர்களுக்கு முன்பே பாதிப்பு ஏற்பட்டு இருந்ததுடன், 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
இதன்பின் பிப்ரவரி 14ந்தேதி 1,716 சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு என சீனா அறிவித்தது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் 230 பேர் உகான் மத்திய மருத்துவமனை பணியாளர்கள் ஆவர்.
கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளிடம் இருந்து மூடி மறைக்க டாக்டர்களை சீனா பலி கொடுத்துள்ளது. அவர்களுக்கு தேவையான முக கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (பி.பி.இ. உடைகள்) ஆகியவற்றை மருத்துவர்களுக்கு வழங்க மறுத்து விட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்தி சீனா வெற்றி கண்டபோதிலும், தொற்றை மறைத்து உலக அளவில் கொரோனா பரவலை ஏற்படுத்தியதில் முதலிடத்தில் உள்ளது.