வாஷிங்டன்,
ஜெருசலேம் நகரத்தில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் உள்ளன. கிழக்கு ஜெருசலேம் நகரை தங்களது எதிர்கால தலைநகராக பாலஸ்தீனர்கள் உரிமை கோரி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அதிரடியாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இது பாலஸ்தீனத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அமைதி முயற்சியை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்தது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை மற்றும் காசா பகுதி மக்களுக்கு வழங்க இருந்த 200 மில்லியன் டாலருக்கு மேலான (சுமார் ரூ.1,400 கோடி) நிதி உதவியை நிறுத்த அமெரிக்கா திடீர் முடிவு எடுத்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வெளியுறவுத்துறை அனுப்பி உள்ளது.
இந்த நிதி உயர் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படும் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் அறிவுறுத்தலின்பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் பாலஸ்தீன நல்லாட்சி, சுகாதாரம், கல்வி, மக்களுக்கான நல திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றுக்காக 251 மில்லியன் டாலர் நிதி வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.