உலக செய்திகள்

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

டாக்கா,

வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவியுமான கலீதா ஜியா 1991-1996 மற்றும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவர். அவர் அதிகாரத்தில் இருந்தபோது தனது பெயரிலான அறக்கட்டளைக்கு 30 ஆயிரம் சதுரடி நிலத்தை டாக்கா நகரில் வாங்கினார். இதற்காக பொதுமக்களிடம் இருந்தும், கட்சி தொண்டர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்பட்டது.

அதேநேரம் தனிநபர்களிடம் இருந்தும் இந்த அறக்கட்டளைக்கு 3,75,000 அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.2 கோடி) நிதியாக குவிந்தது. ஆனால் அவர்கள் யார் என்ற பெயர் விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் ஊழல் பணத்தை முறைகேடாக அறக்கட்டளைக்கு கொண்டு வந்ததாக கலீதா ஜியா மற்றும் அவருடைய முன்னாள் அரசியல் செயலாளர் அப்துல் ஹாரிஸ் சவுத்ரி மற்றும் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, மொனிருல் இஸ்லாம்கான் ஆகிய 4 பேர் மீது போலீசில் 2011-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கலீதா ஜியா மீது கீழ் கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது. மேலும் இந்த வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு தடை விதிக்ககோரி கலீதா ஜியா சார்பில் தாக்கல் செய்த மனுவை நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கீழ் கோர்ட்டு உடனடியாக அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய வழக்கில் தீர்ப்பு அளித்தது.

அப்போது கலீதா ஜியாவுக்கும் மற்ற மூவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி முகமது அக்தார் உஸ்மான் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் ஊழலில் ஈடுபட்டதை தண்டிக்கும் விதமாக கலீதா ஜியாவுக்கு மற்ற 3 குற்றவாளிகளுக்கும் இந்திய பண மதிப்பில் ரூ.8 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத் தவறும் பட்சத்தில் அவர் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

73 வயது கலீதா ஜியா ஏற்கனவே, இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கினார். அந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு கோர்ட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இத் தண்டனையை டாக்கா பழைய மத்திய சிறையில் கலீதா ஜியா அனுபவித்து வரும் நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கலீதா ஜியா சிறையில் இருப்பதால் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சிறை வளாகத்திலேயே சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

வங்காளதேச ஊழல் தடுப்பு சட்டத்தின்படி அதிகபட்சம் வழங்கப்படும் தண்டனை முன்னாள் பிரதமர் கலீதாக ஜியாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது உடல் நலக்குறைவு காரணமாக கலீதா ஜியா கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதேபோல் அவருடைய வக்கீல்களும் கோர்ட்டுக்கு வரவில்லை.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை