உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா? ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்தவர், நவாஸ் ஷெரீப் (வயது 71). இவர் ஊழல் வழக்குகளில் அந்த நாட்டின் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரது ஜாமீனை அந்த நாட்டின் சுப்ரீம்கோர்ட்டு மேலும் 6 வாரங்கள் நீட்டித்து 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

ஆனால் அதன்பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவரது ஜாமீனும் முடிந்தது.

அதைத்தொடர்ந்து அவரை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு எதிராக அல் அஜிசியா ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், டோஷாகானா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், டோஷாகானா ஊழல் வழக்கில் முர்ரி, சாங்கலா கல்லியில் உள்ள தங்களது தந்தை நவாஸ் ஷெரீப் சொத்துகளை ஜப்தி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜப்தி செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலத்தில் விற்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஊழல் தடுப்பு அமைப்பின் துணைத்தலைமை வக்கீல் சர்தார் முசாப்பர் கான் அப்பாசி, இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

டோஷாகானா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 6 மாதங்கள் முடிந்துள்ள போதிலும் அவர் கோர்ட்டில் சரண் அடையவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கு அக்டோபர் 1-ந்தேதி உத்தரவு போடப்பட்டது.

சட்டப்படி நவாஸ் ஷெரீப்பின் முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவதற்கு கோர்ட்டு அனுமதி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்புக்கு சொந்தமான சொத்துகள் பட்டியலையும் கோர்ட்டில் ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

அதில் நவாஸ் ஷெரீப்புக்கு 4 பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளில் பங்குகள் உள்ளன, 3 வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் உள்பட மொத்தம் 8 வங்கிக்கணக்குகள் உள்ளன. மேலும் லேண்ட் குரூசர் கார் ஒன்று, மெர்சிடஸ் கார்கள் 2, டிராக்டர்கள் 2 இருக்கின்றன. மேலும் லாகூர், ஷேகுபுரா, முர்ரி மற்றும் அப்போட்டாபாத் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் சொத்துகளை ஏலம் விட உத்தரவிடுமாறு ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ள மனு மீது அடுத்த சில நாட்களில் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரணை நடத்தி உத்தரவு போடும். அப்போது நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா என்பது தெரியவரும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு