உலக செய்திகள்

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 14 பேர் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். இந்த வெறிச்செயலை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தினத்தந்தி

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தென் கிழக்கு பகுதியில் போர்ட்டலிசா என்ற துறைமுக நகரம் உள்ளது. அந்த நகரத்தையொட்டி போர்ரோ டூ கேகோ என்ற இரவு விடுதி இருக்கிறது.

இந்த இரவு விடுதி, வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய விருந்துகளால் அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் அவற்றில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், சனிக்கிழமை அதிகாலையில் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய 3 கார்களில் துப்பாக்கி ஏந்திய 15 நபர்கள் அந்த இரவு விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.

வந்த வேகத்தில் அவர்கள் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

அங்கு வந்திருந்தவர்கள் அலறியவாறு, நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். பலர் அண்டை வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் துப்பாக்கிச்சூடு சத்தம் ஓயவில்லை. சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது.

இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த இரவு விடுதி, போர்க்களம் போல ஆனது. எங்கு பார்த்தாலும் குண்டு பாய்ந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்துக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இந்த சம்பவத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் வழியிலேயே இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

இரவு விடுதியில் நடந்துள்ள துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி ஆனதை சியாரா மாகாணத்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆண்ட்ரே கோஸ்டா உறுதி செய்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து பயப்படுவதற்கோ, பீதி அடைவதற்கோ ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு