இஸ்லாமாபாத்,
ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்னர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த பாகிஸ்தான், 1947 ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல், 2016-ல் நடந்த பதன்கோட் தாக்குதல், 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஆதரித்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு துணை போவதாகவும் இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் கோரி வருகிறது. ஆனால் பயங்கரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டால், அது இரு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மையை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா ஒரு பகை நாடு போல மாறிவிட்டதால், இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து நாடுகளுடனும் சுமூகமான வர்த்தக உறவுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் அரசின் கொள்கை என்று கூறினார். இம்ரான் கானின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.