கொழும்பு,
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பக்கத்து நாடான இலங்கையிலும் கொரோனா வேகம் எடுத்து உள்ளது. ஏற்கனவே அங்கு பொருளாதார சீரழிவில் சிக்கி தவிக்கும் நிலையில் கொரோனா பரவலும் பொதுமக்களை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. இதனால் இலங்கையில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் துறை பொது இயக்குனர் அசேலாகுணவர்த்தனா கூறியதாவது:-
நாடு முழுவதும் தற்போது பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் முககவசம் கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. எனவே முன்பை போல பொது நிகழ்ச்சிகளில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.