நியூயார்க்,
ஐ.நா. பொதுச்சபை தலைவருடன் விவாதம்
மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி மீனாட்சி லேகி அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துல்லா சாகித்தை சந்தித்தார். அவர்கள் உக்ரைன் போரினால் உணவுப்பொருட்கள், எரிசக்தி பொருட்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் விவாதித்தனர்.
இதை மீனாட்சி லேகி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துல்லா சாகித்தும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
துணைத்தூதரகத்தில் பேச்சு
பின்னர் மீனாட்சி லேகி, மாநகர கலை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அருங்காட்சியகத்தின் மூத்த குழுவுடன் இந்திய, அமெரிக்க கலை மற்றும் அருங்காட்சியக ஒத்துழைப்பு பற்றி அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் நடிகர் ஜூகல் ஹன்ஸ்ராஜின் வளரும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மீனாட்சி லேகி, புத்தகங்களை வாசிப்பதும், மற்றவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதும், பன்முகத்தன்மையை நம்புவதும், ஏற்பதும், குறிப்பாக நமது நாட்டில் இருந்து, பிராந்தியத்தில் இருந்து நமக்கு வந்துள்ளது. இது ஒரு வகையான கொண்டாட்டத்தின் வழி என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, சுதந்திரம், மனித உரிமைகள் என வருகிறபோது அது இந்தியாவின் இருப்பு மையமாக இருப்பதாக நினைக்கிறேன். மனித குலத்தின் நவீன வரலாற்றில் ஒரு சுதந்திர நாடாக 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் நாடு இந்தியா என்பது கொண்டாடத்தகுந்த ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.