வாஷிங்டன்,
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் ஜான் போல்டன். ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கமான இவர், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை விவகாரத்தில், டிரம்புக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு இவர்தான் காரணம். அதே நிலைப்பாட்டை வடகொரியா, ஆப்கானிஸ்தான், ரஷியா தொடர்பான விவகாரங்களிலும் அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என டிரம்பிடம் போல்டன் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் டிரம்புக்கும், போல்டனுக்கும் இடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஜான் போல்டனின் ஆலோசனைகள் பல ஏற்கும்படி இல்லை என்பதால் அவரை பதவியை விட்டு விலகுமாறு வலியுறுத்தினேன். அதன்படி அவர் என்னிடம் பதவி விலகும் கடிதத்தை எனக்கு அளித்தார். அதனை ஏற்றுக் கொண்டு அவரைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளேன். அவர் இதுவரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்? என்பதை ஒரு வாரத்துக்குள் அறிவிப்பேன் என டிரம்ப் கூறினார்.