காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றம் சாட்டினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானுக்குள் வந்து தலீபான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறும்போது, பாகிஸ்தான் 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. அவர்களில் ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள் டஜன் கணக்கானோரும் அடங்குவர். மேலும் பாகிஸ்தானின் மோசமான உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் ஆப்கானிஸ்தான் வந்துள்ளனர். இதுதவிர லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுமார் 7 ஆயிரம் பேரை பாகிஸ்தான் அனுப்பியிருக்கிறது. இவர்கள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கு எதிராக அவர்களுடன் (தலீபான்களுடன்) இணைந்து சண்டையிடுகிறார்கள் என்று ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.