ஜெனீவா,
உலகிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ளது நமது நாடு.
கொரோனா வைரசுக்கு எதிராக மிகப்பெரிய போரை இந்தியா நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரு நீண்ட ஊரடங்கு, நாட்டில் அமலில் இருந்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
சுவிஸ் நாட்டில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 4,478 மீட்டர் உயரத்தில் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ள மேட்டர்ஹார்ன் மலையில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒளிகலைஞர் ஜெர்ரி ஹாப்ஸ்டெட்டர் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை ஒளிரவிட்டு வருகிறார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அவர் மேற்கொண்டு வருகிற இந்த ஆக்கப்பூர்வமான செயல், அந்தந்த நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் என்ற இருளில் இருந்து மீண்டு வர நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்து இருக்கிறது.
அது மட்டுமின்றி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளுடன், சுவிஸ் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
அந்த வரிசையில் இப்போது அந்த ஒளி கலைஞர், மேட்டர்ஹார்ன் மலையில் ஆயிரம் மீட்டர் அளவிலான இந்திய தேசியக்கொடியை ஒளிர விட்டிருக்கிறார். அது பார்ப்பதற்கு அத்தனை பரவசமூட்டுவதாக இருக்கிறது.
இதுபற்றி ஜெர்மாட் மேட்டர்ஹார்ன் என்ற சுற்றுலா அமைப்பு தனது பேஸ்புக் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், பலத்தை அளிக்கவும் மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் டுவிட்டரை பிரதமர் மோடி படத்துடன் ரீடுவிட் செய்துள்ளார். அதில், கொரோனா வைரசை எதிர்த்து உலகமே போராடுகிறது. இந்த தொற்றுநோயை மனித நேயம் வெற்றிக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.