மனிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலா அருகே டால் எரிமலை உள்ளது. நேற்று காலை இந்த எரிமலையில் இருந்து பலத்த சத்தத்துடன் கரும்புகை வெளியேற தொடங்கியது. சுமார் 1,500 மீட்டர் உயரத்துக்கு புகை மண்டலம் எழுந்தது. இதை தொடர்ந்து எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாகாண அரசு உத்தரவிட்டது.
அதன்படி எரிமலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எரிமலை பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் எரிமலைக்கு மேல் பறப்பதை தவிர்க்குமாறு விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் `டால்' எரிமலை கடந்த ஜனவரி மாதம் வெடித்தது. இதன்காரணமாக சுமார் 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்பு குழம்பு ஏராளமான வீடுகள், விவசாய பண்ணைகள் மற்றும் சாலைகளை அழித்தன.