துபாய்
சவுதி அரேபிய ராயல் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், வானில் பிறை தென்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் புனித ரமலான் மாத நோன்பு தொடங்கும் என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக சமூக விலகல் தீவிரமாக வளைகுடா நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த ஆண்டு ரமலான் நோன்பு வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருக்கிறது. மேலும், இஸ்லாமியர்களின் புனித மக்கா, மதினாவுக்கும் மக்கள் வந்து தொழுகை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தொழுகை நடத்த உள்ளனர்.
புனித ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். மசூதிக்கு வந்து யாரும் தொழுகை நடத்தக்கூடாது என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் ரமலான் நோன்பு நோற்கக்கூடாது என்பது அனுமதிக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரக ஃபத்வா கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து உலகத் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.